Nice poetry. I had flicked it from
desikan blogsite. written by manushya puthran
வேறொரு மழை நாள்
சட்டென வந்து சேர்ந்துவிட்டது
இக்கோடை மழை
நாளெல்லாம் காயவைத்த துணியை
பதைபதைக்கச் சேகரிக்கிறாள்
ஈரத்துணிகள்
ஈரவாடையை கூட்டியபடி
வீடெங்கும் பரவுகின்றன
பிள்ளைகள் நனைந்துகொண்டே
வீடு திரும்புகிறார்கள்.
தலைகளைத் துவட்டி உலர்த்திடை மாற்றுகிறாள்.
கட்டிகிடக்கும் நாய் மழையை
அண்ணாந்து பார்க்கிறது
அவள் சங்கிலியை விடுவித்ததும்
அவளை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள்
ஓடிவருகிறது
காங்க்ரீட் கூரையிலிருந்து
கொட்டும் மழைநீரை
வீணாக்க மனமில்லாமல்
குடங்களை எடுத்துவைக்கிறாள்.
குடங்கள் நிரம்பித் தண்ணீர் வழிந்தோடுகிறது
போன மழைக்கு ஒழுகிய இடத்தைப் பார்க்கிறாள்
இல்லை அதில் எந்தக் கசிவும் இல்லை
சாரல் படரத் தொடங்குகிறது
ஜன்னல்களை மூடுகிறாள்
கண்ணாடியில் மழை பெய்துகொண்டே இருக்கிறது
இனி மழையிடம் செய்வதற்கு ஒன்றுமேயில்லை.
வாசலில் வந்து நின்று மழையை
அதன் முடிவற்ற தனிமையின் வழியே
பார்த்துக்கொண்டே நிற்கிறாள்
எங்கிருந்தோ ஒரு மெல்லிய சூறைக்காற்று
அவளது முகத்தில்
காதுகளில்
அடிவயிற்றில்
எல்லா இடத்திலும்
ஈரத்தைக்கொண்டு வருகிறது
சட்டென ஏதோ ஒரு காலத்தில்
ஒரு வயல் வரப்பில்
திடீரென வந்துவிட்ட மழையில் நனைந்தபடி
வீட்டிற்கு ஓடும் சிறுமியின் முகமாக மாறுகிறது
அவளது முகம்
இந்த மழை
இப்போதைக்கு நிற்காது என்று யாரோ சொல்கிறார்கள்
- மனுஷ்ய புத்திரன்